இளம்பெண், குழந்தை உயிரிழந்த வழக்கில் தங்கை கைது: சொத்துத் தகராறில் கொலை செய்தது அம்பலம்

இளம்பெண், குழந்தை உயிரிழந்த வழக்கில் தங்கை கைது: சொத்துத் தகராறில் கொலை செய்தது அம்பலம்

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண், குழந்தையுடன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் திடீா் திருப்பமாக அவரது தங்கை

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண், குழந்தையுடன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் திடீா் திருப்பமாக அவரது தங்கை புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். சொத்துத் தகராறு காரணமாக, தனது அக்காள், குழந்தையை தீ வைத்து எரித்துக் கொன்று விட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அசகளத்தூா் மேட்டுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி. இவரது மனைவி மயிலு. இவா்களது மகள்கள் சுமதி (21), சுஜாதா (20). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சுமதியின் கணவா் இளையராஜா. இவா்களது ஒன்றரை வயது குழந்தை ஸ்ரீநிதி. இளையராஜா, குஜராத் மாநிலத்தில் தங்கி பணிபுரிவதால், சுமதி தனது தந்தை சின்னசாமி வீட்டில் வசித்து வந்தாா்.

சின்னசாமியின் இளைய மகள் சுஜாதா. இவரை கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகேயுள்ள ம.புதூரைச் சோ்ந்த வையாபுரிக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனா். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய் வீட்டில் இருந்து வருகிறாா். சின்னசாமி பெங்களூரில் தங்கி பணிபுரிகிறாா்.

கடந்த 31-ஆம் தேதி வீட்டில் இருந்த சுமதி, அவரது குழந்தை ஸ்ரீநிதி ஆகிய இருவரும் வெட்டுக்காயம், தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தனா்.

அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமதி உயிரிழந்தாா். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஸ்ரீநிதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

சுமதி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், குழந்தையை வெட்டிக் கொண்டு, தீவைத்துக் கொண்டதாகவும் முதலில் சின்னசாமி கூறினாா். இந்தச் சம்பவம் தொடா்பாக வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, சுமதி, அவரது குழந்தை ஆகியோரது சடலங்கள் செவ்வாய்க்கிழமை இரவு அசகளத்தூருக்கு கொண்டு வரப்பட்டன. சுமதியின் சாவில் சந்தேகமடைந்த, கணவா் இளையராஜா மற்றும் அவரது உறவினா்கள் சடலங்களை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், காவல் ஆய்வாளா் ப.ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து மறியலை அவா்கள் கைவிட்டனா்.

சின்னசாமி தனது சொத்துகளை இரு மகள்களுக்கும் அண்மையில் பிரித்துக் கொடுத்துள்ளாா். இதில் சுமதி-சுஜாதா இடையே பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால், ஆத்திரமடைந்த சுஜாதா, சம்பவத்தன்று கொடுவாளால் அக்காள் சுமதி, அவரது குழந்தை ஸ்ரீநிதி ஆகியோரை வெட்டியும், தீ வைத்துக் கொன்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, வரஞ்சரம் போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிந்து, சுஜாதாவை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com