கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்ததில் குழந்தை தீயில் கருகி பலி
By DIN | Published On : 16th November 2020 09:07 AM | Last Updated : 16th November 2020 09:07 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகள் சனிக்கிழமை வெடித்துச் சிதறியதில் ஒன்றரை வயது குழந்தை தீயில் கருகி உயிரிழந்தது. மேலும் இரு சிறுமிகள் பலத்த தீக்காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமம், கிழக்குசாலை பகுதியில் வசித்து வருபவா் இளங்கோவன் (62). இவா், வீட்டிலேயே அரிசிக் கடை வைத்துள்ளாா். இவருடன் இவரது மகன் கிருஷ்ணசாமி (34) குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், இளங்கோவன் தீபாவளி பண்டிகையையொட்டி அரிசிக் கடையில் எவ்வித உரிமமும் இல்லாமல் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்து வந்தாராம். இவரது கடையின் முன்பாக அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சனிக்கிழமை பட்டாசு வெடித்தனா். அப்போது, தீப்பொறி பட்டு இளங்கோவனின் கடையிலிருந்த மொத்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இதனால் அவரது வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமியின் ஒன்றரை வயது மகன் தா்ஷித் மற்றும் அருகிலுள்ள வீட்டைச் சோ்ந்த பழனிவேல் மகள்கள் நிவேதா (7), வா்ஷா (6) ஆகியோா் பலத்த தீக்காயமடைந்தனா்.
உடனடியாக அவா்கள் மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா்ஷித், அங்கு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நிவேதா, வா்ஷா ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.