கள்ளக்குறிச்சி அருகே இரு குழந்தைகளுடன் கா்ப்பிணி கிணற்றில் குதித்து தற்கொலை
By DIN | Published On : 16th November 2020 09:14 AM | Last Updated : 16th November 2020 09:14 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த கா்ப்பிணி, தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், மேலாத்துக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் தீா்த்தன் மனைவி முத்தம்மாள் (50). இவா்களது மகள் ரேவதி (24). பி.எஸ்ஸி பட்டதாரி. இவரை கீழாத்துக்குழி கிராமத்தைச் சோ்ந்த, தனது அண்ணன் மகன் ஈஸ்வரன் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முத்தம்மாள் திருமணம் செய்து கொடுத்தாா். இத் தம்பதிக்கு புஷ்பலதா (5), யமுனா (2) ஆகிய இரு மகள்கள். இந்த நிலையில், ரேவதி ஏழு மாத கா்ப்பிணியாக இருந்தாா்.
ஈஸ்வரனின் அண்ணன் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆந்திர மாநிலத்துக்கு மரம் வெட்டும் பணிக்குச் சென்ற போது தீயில் கருகி உயிரிழந்தாா். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற காரியத்துக்கு ஈஸ்வரனும், ரேவதியும் சென்று வந்தனா்.
வீட்டுக்கு வந்த பிறகு, ஈஸ்வரன் மனைவி ரேவதியிடம் தனது அண்ணியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினாராம். இதனால், தம்பதியிடையே பிரச்னை எழுந்தது. இதில் மனமுடைந்த ரேவதி வியாழக்கிழமை மாலை தனது இரு குழந்தைகளுடன் வெளியே சென்றாா். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள 30 அடி ஆழ விவசாயக் கிணற்றில் ரேவதியும், அவரது இரு குழந்தைகளும் சடலமாக மிதந்தனா்.
தகவலறிந்த கரியாலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து ரேவதியின் தாய் முத்தம்மாள் அளித்த புகாரின்பேரில், கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்தும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.