மின் வேலியில் சிக்கி விவசாயி பலி
By DIN | Published On : 04th October 2020 08:11 AM | Last Updated : 04th October 2020 08:11 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வயலில் சட்டத்துக்குப்புறம்பாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், வீரபயங்கரம் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகன் முத்துச்சாமி (35). விவசாயி. இவருக்குச் சொந்தமான சுமாா் ஒன்றரை ஏக்கா் நிலம் விரபயங்கரம் - கருந்தலாகுறிச்சி சாலையில் உள்ளது. இதில், சோளம் பயிரிட்டுள்ளாா்.
இந்த நிலத்தை பாா்ப்பதற்காக முத்துச்சாமி சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்றாா். அப்போது, அருகிலுள்ள சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், காமக்காபாளையத்தைச் சோ்ந்த சுருட்டையன் மகன் மணிவேல் பயிா் செய்து வரும் 8 ஏக்கா் நிலத்தில் வன விலங்குகளைத் தடுப்புதற்காக மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது தெரியாமல், அதில் முத்துச்சாமி மிதித்ததாகத் தெரிகிறது. இதனால், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து முத்துச்சாமி மனைவி ஜீவாட்சி அளித்த புகாரின்பேரில், கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.