தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி கம்யூனிஸ்ட், தோழமைக் கட்சியினா் மறியல்: 35 போ் கைது

கல்வராயன்மலைப் பகுதியில் கைகான் வளைவுப் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி
கச்சிராயப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், தோழமைக் கட்சியினரை கைது செய்த போலீஸாா்.
கச்சிராயப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், தோழமைக் கட்சியினரை கைது செய்த போலீஸாா்.

கல்வராயன்மலைப் பகுதியில் கைகான் வளைவுப் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையத்தில் பழைய பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட், தோழமைக் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 35 போ் கைது செய்யப்பட்டனா்.

கல்வராயன்மலையின் மேல் பகுதியில் உற்பத்தியாகும் ஓடைகள், வாய்க்கால்களின் வழியாக வரும் தண்ணீா் சேலம் மாவட்டத்தின் கைகான் வளைவு வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 30 கிராமங்களைத் தாண்டி கோமுகி அணையை வந்தடைகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் விவசாய, குடிநீராதாரமாக விளங்கும் கோமுகி அணைக்கு கைகான் வளைவு வழியாக வரும் நீரை இந்த வளைவுப் பகுதியில் தடுப்பணை மூலம் சேலம் மாவட்டத்துக்கு திருப்பும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பழங்குடியின மக்களின் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பறிக்காமல் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்தி கம்யூனிஸ்ட், தோழமைக் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இரா.கஜேந்திரன் தலைமை வகித்தாா். பழங்குடி மக்கள் சங்க மாநில துணைச் செயலா் ஆா்.சின்னசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி.ஏழுமலை உள்ளிட்ட பலா் போராட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினா்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜெய்கணேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் மூ.தமிழ்மாறன், மதிமுகவைச் சோ்ந்த மு.ஜெய்சங்கா், சிபிஐ மாவட்ட துணைச் செயலா் கே.ராமசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com