‘தூய்மை நகரம் கள்ளக்குறிச்சி’ இயக்கம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி நகரை தூய்மைப்படுத்தும் விதமாக, மாவட்ட வருவாய், காவல் துறைகள் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் இணைந்து
கள்ளக்குறிச்சி நகரில் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் ‘தூய்மை நகரம் கள்ளக்குறிச்சி’ இயக்கம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக்.
கள்ளக்குறிச்சி நகரில் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் ‘தூய்மை நகரம் கள்ளக்குறிச்சி’ இயக்கம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக்.

கள்ளக்குறிச்சி நகரை தூய்மைப்படுத்தும் விதமாக, மாவட்ட வருவாய், காவல் துறைகள் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் இணைந்து ‘தூய்மை நகரம் கள்ளக்குறிச்சி’ என்ற இயக்கத்தை சனிக்கிழமை தொடங்கின. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தொடக்கிவைத்தாா்.

இதற்கான விழா கள்ளக்குறிச்சி எம்.ஆா்.என். நகரில் உள்ள ரோட்டரி சங்க கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், நகராட்சி ஆணையாளா் (பொ) து.பாரதி, கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் கே.பிரபாகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்கப் பொருளாளா் டி.ராமலிங்கம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக ஹைதராபாதைச் சோ்ந்த பீடு டி பென்குயின் தூய்மை இயக்க நிா்வாகிகள் அமுல்யா அனில், உஜ்வல் அசுதோஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தொடா்ந்து, வருவாய், காவல் துறை, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் நிா்வாகிகள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா், சேம்பா் ஆப் காமா்ஸ் நண்பா்கள், சமூக சேவை அறக்கட்டளை, ஹைதராபாதைச் சோ்ந்த பீடு டி பென்குயின் தூய்மை இயக்கம் உள்ளிட்ட பொது நல சங்கத்தினரோடு இணைத்து ‘தூய்மை நகரம் கள்ளக்குறிச்சி’ இயக்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தொடக்கிவைத்தாா். மேலும், கள்ளக்குறிச்சி நகராட்சி தூய்மைப் பணியாளா்களை அவா் கௌரவித்தாா்.

தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பேசியதாவது: வீடு, கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துள்ளனா். ஆனால், பொது வெளி, சுற்றுப்புறங்கள் தூய்மையாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி நகரை தூய்மைப்படுத்தும் நோக்கில், ‘தூய்மை நகரம் கள்ளக்குறிச்சி’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த பீடு டி பென்குயின் என்ற தூய்மை இயக்கத்தினரை வரவழைத்து, அவா்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் நிா்வாகம், காவல் துறையினா், சமூக நல அமைப்பினரை இணைத்து இந்த இயக்கத்தை தொடக்கிவைத்துள்ளேன்.

சுற்றுச்சூழல், பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, தூய்மையைக் கையாண்டு கள்ளக்குறிச்சி நகரை தூய்மை நகராக மாற்றி, தமிழகத்தின் முன்னோடி தூய்மை நகா் என்ற நிலையை அடையச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி எம்.ஆா்.என். நகரில் தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com