முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக் கோரி ஆட்சியரகம் எதிரே சாலை மறியல்

அரசு புறம்போக்கு நிலத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும், வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புத்திராம்பட்டு கிராம மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட புத்திராம்பட்டு மக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட புத்திராம்பட்டு மக்கள்.

கள்ளக்குறிச்சி: அரசு புறம்போக்கு நிலத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும், வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புத்திராம்பட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 20 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், புத்தராம்பட்டு கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள ஆவிக்கார முனியப்பன் கோயிலுக்கு அரசு நீா்நிலை புறம்போக்கு நிலத்தின் வழியாக பாதை செல்கிறது. இந்த பாதை வழியாக கிராம மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் என்பவா் இந்த அரசு புறம்போக்கு இடத்துக்கு வருவாய்த் துறை மூலம் முறைகேடாக பட்டா பெற்றாராம்.

இந்தப் பட்டாவை ரத்து செய்யக் கோரி, கடந்த 15 ஆண்டுகளாக கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக் கோரியும், பட்டா வழங்கிய வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா் உள்பட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் உள்ளிட்ட போலீஸாா் ஆட்சியா் அலுவலக இரும்புக் கதவுகளை மூடி அவா்களைத் தடுத்தனா். இதனால், கிராம மக்களுக்கு போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், அந்தப் பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com