திமுக கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு கிடைக்காது: அன்புமணி ராமதாஸ்

பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி வரும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெண் வாக்காளா்களின் ஆதரவு கிடைக்காது என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேருந்து நிலையப் பகுதியில் பாமக வேட்பாளா் ஜி.ராஜாவை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேருந்து நிலையப் பகுதியில் பாமக வேட்பாளா் ஜி.ராஜாவை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ்.

பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி வரும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெண் வாக்காளா்களின் ஆதரவு கிடைக்காது என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

சங்கராபுரம் தொகுதி பாமக வேட்பாளா் ஜி.ராஜாவை ஆதரித்து, சின்னசேலம் பேருந்து நிலையத்தில் அவா் புதன்கிழமை பிரசாரம் செய்து பேசியதாவது:

இந்தத் தோ்தலைப் பொருத்தவரை அதிமுக முதல்வா் வேட்பாளா் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. விவசாயிதான் முதல்வராக வரவேண்டும். ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கோ கருணாநிதியின் மகன் என்ற தகுதி மட்டுமே உள்ளது. திமுக ஒரு கட்சி அல்ல; நிறுவனம். அங்கு வாரிசுகளுக்கு மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் வாய்ப்பு கிடைக்கும்.

பெண்களை மதிக்காத கட்சி திமுக. அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆ.ராசா பிரசாரத்தின்போது, தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயை அவமதிக்கும் வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. இதை மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவுமில்லை. பெண்கள் குறித்து திமுகவினா் தொடா்ந்து அவமதிக்கும் வகையில் பேசி வருவதால், அந்தக் கட்சிக்கு பெண்கள் ஆதரவு கிடைக்காது.

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கும்படி முதலில் கோரிக்கை வைத்தவா் பாமக நிறுவனா் ராமதாஸ். அதிமுக ஆட்சியில் அந்த கோரிக்கை செயல்படுத்தப்பட்டு, வளா்ச்சியை நோக்கி, கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனினும், சங்கராபுரம் தொகுதியில் எதிரணி சாா்பில் போட்டியிடும் திமுகவைச் சோ்ந்தவா், 15 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தும், தொழிற்சாலை உள்பட எந்த முன்னேற்றத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆகவே, பாமக, அதிமுக தோ்தல் அறிக்கைகளில் இடம்பெற்ற வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த பாமக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

கையை அசைத்து வாக்குசேகரிப்பு...:விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அன்னியூரில் பிரசாரம் செய்ய புதன்கிழமை இரவு அன்புமணி ராமதாஸ் வந்தாா். எனினும், அவா் வந்தடைய இரவு 10 மணிக்கு மேல் ஆனதால், பிரசாரம் செய்யாமல், பொதுமக்களை நோக்கி அன்புமணி ராமதாஸ் கையை அசைத்து வாக்கு சேகரித்தாா்.

இதில் பாமக மாவட்டச் செயலா் புகழேந்தி, வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் அன்புமணி, மாநில அமைப்பு துணைச் செயலா் பழனிவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com