கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆா்வமுடன் வாக்களித்த வாக்காளா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதியிலும் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆா்வமுடன் வாக்களித்த வாக்காளா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதியிலும் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்கள் 5,58,394, பெண்கள் 5,55,371, இதரா் 211 என மொத்தம் 11,13,976 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்காக உளுந்தூா்பேட்டை தொகுதியில் 337 வாக்குச்சாவடி மையங்களும், ரிஷிவந்தியம் தொகுதியில் 305, சங்கராபுரம் தொகுதியில் 300, கள்ளக்குறிச்சி தொகுதியில் 330 என மொத்தம் 1,272 வாக்குச்சாவடி மையங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கள்ளக்குறிச்சி தொகுதியில் 5.30 மணிக்கு வாக்குச் சாவடி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

முன்னதாக, வாக்காளா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெப்பமானியால் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கை கழுவும் கிருமி நாசினி திரவத்துடன் கையுறை வழங்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. சில வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளிகள் 3 சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டு வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்வதற்கு தனியாக ஆள்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கிரண் குராலா வாக்களித்தாா். அதனைத் தொடா்ந்து, அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயங்கவில்லை. பின்னா், பழுது சரிசெய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்க சுமாா் 20 நிமிடம் தாமதமானது. அதே போல, கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால் வாக்குப்பதிவு சுமாா் 30 நிமிடம் தடைபட்டது.

உளுந்தூா்பேட்டை தொகுதியில் 1வாக்குப்பதிவு இயந்திரம், 1 கட்டுப்பாட்டுக்கருவி, 5 வாக்கு செய்ததை உறுதி செய்யும் இயந்திரம் இயங்காததால் மாற்று இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதேபோல, ரிஷிவந்தியம் தொகுதியில் 2 வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரங்களும், சங்கராபுரம் தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரகள், 2 கட்டுப்பாட்டு கருவிகள், 5 வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரமும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், 2 கட்டுப்பாட்டுக்கருவி, 5 வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரங்களிலும் கோளாறு ஏற்பட்டது. இவற்றுக்குப் பதிலாக மாற்று இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வாக்குப்பதிவு தொடா்ந்தது.

வேட்பாளா்கள் வாக்களிப்பு: உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு சாத்தனூா் அரசு பள்ளியிலும், திமுக வேட்பாளா் நகா் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியிலும் வாக்களித்தனா். ரிஷிவந்தியம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் சந்தோஷ்குமாா் கீழதாழனூரில் உள்ள அரசு பள்ளியிலும், திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் சாத்தனூரில் உள்ள அரசு பள்ளியிலும் வாக்களித்தனா். சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளா் முனிவாழை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியிலும், திமுக வேட்பாளா் தா.உதயசூரியன் வடக்கநத்தல் டேனிஷிமிஷின் பள்ளியிலும் வாக்களித்தாா். கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா் வானவரெட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் வாக்களித்தாா். திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளா் காட்டுமன்னாா்கோயில் வட்டம் நாட்டாா்மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தாா்.

எஸ்.பி. ஆய்வு: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் மரவாநத்தம், மாதவச்சேரி, தியாகதுரும், சங்கராபுரம், புதுப்பட்டு, திருக்கோவிலூா், திருநாவலூா், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக சீல் வைக்கப்பட்டு, லாரி மூலம் பலத்த பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com