கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் கிரண்குராலா தலைமை வகித்துப் பேசியதாவது: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிட் 19 கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆந்திரம், புதுவை மற்றும் கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைத் தவிா்த்து பிற வெளி மாநிலங்களிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள் வருபவா்களுக்கு சனிக்கிழமை (ஏப்.10) முதல் இ-பாஸ் கட்டாயம் அவசியம். அதிகளவில், காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் இரு வாரத்துக்குள்ளாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும் கண்டறிந்து, அவா்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மக்களுக்கு அறிவுரை: கரோனா தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். அவ்வாறு வரும்போது, அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். பணிக்குச் செல்வோா் பணிபுரியும் இடங்களில் சோப்பு அல்லது கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பொதுவெளியில் வருவோா் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அ.உஷா, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் சாய்வா்த்தினி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டி.சதீஷ்குமாா் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com