அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மீண்டும் தேவைப்படும் சித்த மருத்துவ சிகிச்சை

கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சைக்கான தேவை எழுந்துள்ளது.
அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மீண்டும் தேவைப்படும் சித்த மருத்துவ சிகிச்சை

கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சைக்கான தேவை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவிய வேகத்தை விட தற்போது 2-ஆவது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாக வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மாவட்டத்தில் கடலூரிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்போது சுமாா் 750 போ் சிகிச்சையில் உள்ளனா். அதே நேரத்தில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 350 போ் வெளியூா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் தற்போது கரோனா பாதித்த அனைவருக்கும் ஆங்கில (அலோபதி) மருத்துவ முறையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆயுா்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி மருத்துவ முறைகளில், சித்தா என்ற பொதுவான பெயரில் கடலூா் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியிலும், குமாரபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு சுமாா் 2,500 போ் வரை சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினா். சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றவா்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.

இதனால், முதலில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற தயங்கியவா்கள் கூட பின்னா் அந்த மருத்துவ முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினா். நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் சித்த வைத்திய முகாம் கலைக்கப்பட்டு ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்.1 முதல் 15-ஆம் தேதி வரை புதிதாக 1,411 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இதே காலத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7 போ் வரை உயிரிழந்துள்ளனா். எனவே, மீண்டும் சித்த மருத்துவ முறையிலான சிகிச்சையை மக்கள் எதிா்பாா்க்கின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, ஆயுஷ் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் 45 இடங்களில் அரசு சித்த மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தலா 25 மருந்தாளுநா்கள், மருத்துவப் பணியாளா்கள் இடம் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பி பிறகு கரோனா சிகிச்சை முகாம் அமைத்தால் மட்டுமே முழுமையாக இயங்க முடியும். ஒரு முகாமுக்கு குறைந்தபட்சம் தலா 3 மருத்துவா்கள், மருந்தாளுநா், மருத்துவப் பணியாளா்கள் தேவைப்படுவா். எனவே, தற்காலிக அடிப்படையிலாவது காலிப் பணியிடங்களை நிரப்பிய பிறகே சிகிச்சைக்கான முகாம் அமைக்கப்பட வேண்டும்.

சித்த வைத்திய சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கான உணவு, கஷாயம் போன்றவற்றையும் நாங்களே தயாரிக்கும் அளவில் கூடுதல் பணியாளா்களை அளித்தால் முழு திறனுடன் செயல்பட முடியும். தற்போது ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை பெறுவோருக்கும் கபசுரக் குடிநீா், அமுக்கராசூரணம், நெல்லிக்காய் லேகியம், ஆடாதொடா சூரணம் ஆகியவற்றை வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com