முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
எல்லைக் காவலா்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 06th December 2021 12:20 AM | Last Updated : 06th December 2021 12:20 AM | அ+அ அ- |

எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த எல்லை காவலா்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
கடந்த 1956ஆம் ஆண்டு நவ.1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரம், கா்நாடகம், கேரளம் பிரிந்து சென்றன. நவ.1-ஐ எல்லைப் போராட்ட நாளாக நினைவு கூரும் வகையில், எல்லைப் போராட்டங்களில் சிறை சென்ற தியாகிகளை தமிழக அரசு கௌரவப்படுத்தி வருகிறது.
எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற 110 எல்லை காவலா்களில் 14 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை கடந்த நவ.1ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். மற்ற எல்லை காவலா்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் காசோலை வழங்கி சிறப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த எல்லை காவலா்களில் ஒருவரான என்.இராமசாமிக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். மற்ற எல்லைக் காவலரான உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த வ.கி.பழனிவேலு உடல்நலக் குறைவாக இருப்பதால் அலுவலா்கள் மூலம் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று காசோலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது விழுப்புரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் கு.ப.சத்தியபிரியா, உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனா்.