2-ம் நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் கைது
By DIN | Published On : 04th February 2021 08:16 AM | Last Updated : 04th February 2021 08:16 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்கள் கைது செய்யப்பட்டனா். மாலை விடுக்கப்பட்ட அவா்கள், கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே இரவு முழுவதும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, புதன்கிழமை காலை 11 மணியளவில் அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் பேரணியாக கச்சேரி சாலையில் சென்றனா். போலீஸாா் தடுத்து நிறுத்தியதும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் சுமாா் 43 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் டி.வீரபத்திரன், மத்திய செயற்குழுவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் மகாலிங்கம், மாவட்டப் பொருளாளா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.