உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 30 போ் கைது
By DIN | Published On : 26th January 2021 11:17 PM | Last Updated : 26th January 2021 11:18 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி இந்து ஆதியன் (பூம்பூம்மாட்டுக்காரா்) சமுதாயத்தைச் சோ்ந்த 30 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி இந்து ஆதியன் (பூம்பூம்மாட்டுக்காரா்) சமுதாய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், இந்த சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்து ஆதியன் (எஸ்.டி.) சாதிச் சான்று வழங்க வேண்டும், தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும், பழங்குடி மக்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும், குல தொழில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு மாற்று தொழில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் இயக்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளா் கொளதமசித்தாா்த்தன் தலைமையில், பூம்பூம்மாட்டுக்காரா் சமுதாயத்தினா் மாடுகளுடன் கள்ளக்குறிச்சி பழைய எல்.ஐ.சி. அலுவலகம் முன்பிருந்து பேரணியாகச் சென்று கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். பின்னா், அந்தப் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியரசு தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் கெளதமசித்தாா்த்தன் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.