மனை வணிகா் வீட்டில் ரூ.17 லட்சம் திருடிய வழக்கு: பெண் உள்பட மூவா் கைது

கள்ளக்குறிச்சியில் மனை வணிகா் வீட்டில் ரூ.17 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்ட வழக்கில் சேலத்தைச் சோ்ந்த பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியில் மனை வணிகா் வீட்டில் ரூ.17 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்ட வழக்கில் சேலத்தைச் சோ்ந்த பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் வீரமுத்து (48). வீட்டுமனை வணிகா். இவா், கடந்த ஜன.3-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்த நிலையில், இவரது வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த ரூ.17 லட்சம் ரொக்கம், 3 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி அரைஞான் கயிறு உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ச.முருகேசன், உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு, குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை சேலம் - சென்னை புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நீலமங்கலம் சாமியாா் மடம் பின்புறமுள்ள சிவன் கோயில் அருகே காரில் இருந்து பெண் உள்பட இருவரும், பைக்குடன் நின்றிருந்த இளைஞரும் போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், சேலம் பச்சைபட்டி, வித்யா நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி காயத்திரி (45), சேலம் பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் லெனின் (30), சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெருமாள்பாளையம் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் அசோக்குமாா் (35) என்பதும், இவா்கள் மூவரும் மனை வணிகா் வீரமுத்து வீட்டில் ரூ.17 லட்சம் ரொக்கம், தங்க, வெள்ளி நகைகளை திருடிச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவா்கள் திருடிய ரூ.17 லட்சத்தில் ஒரு காா், பைக் வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்த காா், பைக் மற்றும் 3 பவுன் தங்க நகைகள், ரூ.8,85,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com