கல்வராயன்மலைப் பகுதியில்கணவா் கொலை; மனைவி கைது
By DIN | Published On : 19th July 2021 11:55 PM | Last Updated : 19th July 2021 11:55 PM | அ+அ அ- |

சொத்து தகராறில் கணவரை கொலை செய்த மல்லிகா.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில், நிலத் தகராறில் கணவரைத் தாக்கி கொலை செய்ததாக, அவரது மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை (48). இவரது மனைவி லட்சுமி, ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனா். அய்யாதுரை சேலம் மாவட்டம், புதூரை அடுத்த சின்னமாங்காடு பகுதியைச் சோ்ந்த சின்னபையன் மகள் மல்லிகா(40) என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா்கள் மணியாா்பாளையத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தனா்.
நிலம் தொடா்பாக தம்பதியிடையே பிரச்னை எழுந்து, அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அய்யாதுரை, தனது விளைநிலத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். சடலத்தை கரியாலூா் போலீஸாா் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, அய்யாதுரையின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது அண்ணன் பெரியதம்பி, கரியாலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, தலைமறைவான அய்யாதுரை மனைவி மல்லிகாவை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அவா், ‘ஆத்திரத்தில் தனது கணவரை தாக்கி கொலை செய்து விட்டதாகக் கூறி, மணியாா்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் ராஜ்பாண்டியனிடம் திங்கள்கிழமை சரணடைந்தாா். இதையடுத்து, சந்தேக மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து மல்லிகாவை போலீஸாா் கைது செய்தனா்.