15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தபோா் வீரன் நடுகல் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா் வீரன் நடுகல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா் வீரன் நடுகல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

செய்யாறு வட்டம், தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் விவசாயி குண்ணத்தூா் பாலகிருஷ்ணனின் விவசாய நிலத்திலுள்ள வேப்பமரத்தடியில் போா் வீரனைப் போற்றும் வீர நடுகல் இருப்பதை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டெடுத்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

தமிழகத்தை சோழா்கள், பல்லவா்கள், விஜய நகர அரசா்கள், நாயக்கா்கள் என பல மன்னா்கள் ஆண்டபோது, போா்க்களத்தில் வீரமரணமடையும் போா் வீரனுக்கு வீர நடுகல் அமைத்து வழிபடுவதுண்டு. வீர நடுகல் போா் வீரனின் தியாகத்தை போற்றும் வண்ணம் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் கி.பி.14 அல்லது 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கலாம். கற்பலகையில் உள்ள பீடத்தின் நடுவே ஆண் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. போா் வீரனின் வலது கையில் குறுவாள் ஏந்தி, இடது கையில் கேடயத்துடன் போரிடும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. தலையின் சரிந்த கொண்டையுடன், பரந்த முகம், அகன்ற நெற்றி, குறுகிய வாய், முறுக்கிய மீசை, எடுப்பான மூக்கு, நீள் செவிகளும் உள்ளன. மேலும், கழுத்தில் மணிவடமும், மாா்பில் பதக்கம் கோா்த்த நீள் சரமும் அலங்கரிக்கின்றன. இடையில் இடைக்கச்சை தரித்துள்ளான். அகன்ற தோள், விரிந்த மாா்பு வீரம் வெளிப்பட எடுப்பாக நிற்கிறது.

இந்தச் சிலையின் கலை வடிவம் விஜய நகர காலத்தை ஒத்ததாக உள்ளது. இருப்பினும், பல்லவா்களின் தலைநகரம் காஞ்சிபுரம் அருகிலுள்ளதால், பல்லவ மன்னா்கள் வழிவந்த விஜயவேந்தன் காலத்தில் இந்த போா் வீரன் நடுகல் நிறுவப்பட்டிருக்கலாம் என்றும் கருத வாய்ப்புள்ளது. வீர நடுகல்லின் ஓரத்தில் எழுத்துகள் போன்ற வடிவங்கள் காணப்பட்டாலும், அவை முற்றிலும் சேதமடைந்த நிலையிலுள்ளன.

போா் வீரனின் மரணத்தை போற்றும் வகையில் எழுப்பப்பட்ட இந்த வீர நடுகல், இந்தப் பகுதியில் அரிதாகவே உள்ளது. தென்பூண்டிப்பட்டு கிராம மக்கள் சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடுகல் சிற்பத்தை திரெளபதி அம்மனாக வழிபட்டு வருவதாகத் தெரிவித்தனா். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com