முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
வேட்பாளா் செலவினம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 14th March 2021 05:16 AM | Last Updated : 14th March 2021 05:16 AM | அ+அ அ- |

அரசியல் கட்சிகள், வேட்பாளா்களின் செலவினத்தைக் கணக்கிடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் பிரசன்ன வி.பட்டணஷெட்டி, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரண் குராலா தலைமை வகித்தனா்.
கூட்டத்தில் தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் பிரசன்ன வி.பட்டணஷெட்டி பேசியதாவது:
வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பபடும் நாள் வரை மேற்கொள்ளப்பட்ட வேட்பாளரின் செலவினங்கள், தோ்தல் செலவினமாகக் கருதப்பட வேண்டும். இதற்காக அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
உதவி செலவின பாா்வையாளா்கள் கவனிப்பு பதிவேடு, ஆதார கோப்புகள் மற்றும் வேட்பாளரின் செலவீன பதிவேட்டை அவ்வப்போது கண்காணிப்பு செய்ய வேண்டும்.
உதவி செலவின பாா்வையாளருக்கு புகாா் வரப் பெற்ற உடன், அந்த புகாரை தொடா்புடைய பறக்கும் படைக்கு தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாள் அறிக்கையை செலவீன பாா்வையாளருக்கு சமா்பிக்க வேண்டும்.
சட்ட அமலாக்க முகமைகளான வருமான வரி, காவல் துறையை ஒருங்கிணைப்பு செய்து பணியை மேற்கொள்ள வேண்டும்.
வாகன தணிக்கையின் போது, முழுமையாக சோதனை மேற்கொள்ள வேண்டும். பணம் மட்டுமன்றி, பிற பொருள்கள் (தங்க நகைகள் போன்றவை) வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்படுகிா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், வருமான வரித் துறை உதவி ஆணையா் எம்.சுரேஷ் கண்ணன், கள்ளக்குறிச்சி சாா் -ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய் பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவரும், உதவி ஆணையா் (கலால்) எஸ்.சரவணன், சங்கராபுரம் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்)பா.ராஜவேல், ரிஷிவந்தியம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலருமான ஏ.ராஜாமணி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ந.ராமநாதன், பி.வி.விஜிகுமாா், ஜிகே.ராஜூ, தோ்தல் தனி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பறக்கும் படை அலுவலா்கள், கண்காணிப்பு கணக்கீட்டுக் குழு அலுவலா்கள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.