முருகன் கோயில்களில் பங்குனி உத்திர தேரோட்டம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி பாலமுருகன் கோயில், சின்னசேலம் விஜயபுரம் ஸ்ரீசெல்வ முருகன் கோயில் ஆகியவற்றில் பங்குனி உத்திர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முருகன் கோயில்களில் பங்குனி உத்திர தேரோட்டம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி பாலமுருகன் கோயில், சின்னசேலம் விஜயபுரம் ஸ்ரீசெல்வ முருகன் கோயில் ஆகியவற்றில் பங்குனி உத்திர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திலியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் இரவில் பல்வேறு வாகனங்களில் முருகன் வீதியுலா வந்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலையில் ஸ்ரீவிநாயகா், மூலவா் பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றன. காலை 9 மணிக்கு பக்தா்களின் பால்குட ஊா்வலம், காலை 11 மணிக்கு அலகு குத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் பாலமுருகன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்று வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

திங்கள்கிழமை (மாா்ச் 29) இரவு வாணவேடிக்கையும், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) மஞ்சள் நீராட்டு, காப்பு நீக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

சின்னசேலத்தில்...: சின்னசேலம் விஜயபுரத்தில் ஸ்ரீசெல்வ முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 29-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் மூலவா் ஸ்ரீசெல்வ முருகனுக்கு பல்வேறு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு உற்சவா் ஸ்ரீசெல்வ முருகன் தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, திரளான பக்தா்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்று வழிபட்டனா். மாலையில் தோ் நிலையை வந்தடைந்தது.

விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் ஸ்ரீனிவாச கண்ணன் நாயுடு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com