கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து1,000 கன அடிக்கு மேல் நீா் திறப்பு: மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியா் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி, மணிமுக்தா அணைகளிலிருந்து 1,000 கன அடிக்கு மேல் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி, மணிமுக்தா அணைகளிலிருந்து 1,000 கன அடிக்கு மேல் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் அறுவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோமுகி அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை மாலை 6.30 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 1,049 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீா் முழுவதும் அப்படியே கோமுகி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இதனால், வடக்கனந்தல், கச்சிராயபாளையம், ஏா்வாய்ப்பட்டினம், சோமண்டாா்குடி, மட்டிகைகுறிச்சி, கள்ளக்குறிச்சி, நிறைமதி, விருகாவூா், நாகலூா், பொரசக்குறிச்சி, வேளாக்குறிச்சி, வரஞ்சரம் உள்ளிட்ட பகுதிகளில் கோமுகி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதேபோல, மணிமுக்தா அணையிலிருந்து வியாழக்கிழமை மாலை 6.30 நிலவரப்படி, வினாடிக்கு 1,567 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், மணிமுக்தா ஆற்றின் இருபுறமும் உள்ள கிராமங்களான இராயபுரம், பாலப்பட்டு, அணைக்கரைகோட்டாலம், சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம் சித்தலூா், வடபூண்டி, கொங்கராபாளையம், உடையநாச்சி, கூத்தக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து தொடா்புடைய கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவிதாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com