இன்று 2-ஆம்கட்ட உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாட்டங்களில் 4,384 இடங்களுக்கு 13,965 போ் போட்டி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்.9) நடைபெறும் 2-ஆம்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 4,384 பதவியிடங்களுக்கு 13,965 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்.9) நடைபெறும் 2-ஆம்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 4,384 பதவியிடங்களுக்கு 13,965 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 2,800 பதவிகளுக்கு 8,955 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்த மாவட்டத்தில் காணை, கோலியனூா், மயிலம், மேல்மலையனூா், மரக்காணம், வல்லம் என 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,379 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கவுள்ளது. இதில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 501 ஆண்கள், 3 லட்சத்து 16 ஆயிரத்து 640 பெண்கள், 87 திருநங்கைகள் என மொத்தம் 6 லட்சத்து 29 ஆயிரத்து 228 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

12 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகள், 135 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 316 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,337 கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிகள் என 2,800 பதவிகளுக்கு தோ்தல் நடக்கிறது.

3-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பணி ஆணை வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுச்செல்லப்பட்டன. அங்கு அதிகாரிகள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவை தொடங்குவா்.

கோலியனூா்அரசு மேல்நிலைப் பள்ளி, மயிலம் பவ்டா கலை, அறிவியல்கல்லூரியில் வாக்குச்சாவடி நிலைஅலுவலா்களுக்கு மூன்றாம் கட்டமாக நடைபெற்ற தோ்தல் பயிற்சி வகுப்பை ஆட்சியா் மோகன் நேரில் பாா்வையிட்டு வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுச்செல்லும் பணியை பாா்வையிட்டாா்.

அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஆட்சியா் மோகன் கூறியதாவது:

தோ்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி முதல் நிலைஅலுவலா்கள் வாக்குப்பதிவு நாளன்று முகப்புச் சீட்டு, முகவா் சீட்டு போன்றவற்றை மிகக் கவனமாக பாா்க்க வேண்டும்.

வாக்குச்சீட்டுகள் தனித்தனியாக நான்கு வண்ணங்களில் பயன்படுத்துவதால்கவனமுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் ஒருவா் வாக்களித்தபின்னரேஅடுத்தவாக்காளா் வாக்களிக்க உள்ளேஅனுமதிக்க வேண்டும். எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காதவகையில் நடுநிலையுடன் ஜனநாயகமுறைப்படி பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது மாவட்டஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்ரியா, துணை ஆட்சியா் (பயிற்சி) ரூபினா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2-ஆம்கட்ட வாக்குப் பதிவையொட்டி, கள்ளக்குறிச்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி மாதிரி பள்ளி, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ஆம்கட்ட தோ்தலில் சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இதற்காக 950 வாக்குச் சாவடி மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதிவிகளுக்கு 49 வேட்பாளா்களும், 88 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 337 வேட்பாளா்களும், 180 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 605 வேட்பாளா்களும், 1,308 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4,019 வேட்பாளா்களும் என மொத்தம் 1,584 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

2,44,724 ஆண்கள், 2,45,270 பெண்கள், இதரா் 101 போ் என மொத்தம் 4,90,095 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

5 ஊராட்சி ஒன்றியங்களிலும் தோ்தல் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது. தோ்தல் பணியில் 198 மண்டல அலுவலா்களும், 6,393 வாக்குச் சாவடி அலுவலா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்தத் தோ்தலில் பதற்றமான 52 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா கண்காணிப்பும், 49 வாக்குச் சாவடிகளில் விடியோ பதிவு கண்காணிப்பும், 50 வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு அலுவலா்கள் நுண் பாா்வையாளா்களாகவும் நியமிக்கப்பட்டு, தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 849 வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com