தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு: அமைதிப் பேச்சுவாா்த்தையில சுமுக உடன்பாடு

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நாககுப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் ஊரக உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நாககுப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் ஊரக உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, சின்னசேலம் வட்டாட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் நாககுப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதால், கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பை கைவிட்டனா்.

நாககுப்பம் கிராமத்தில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு அருகே பாண்டியன்குப்பம் வருவாய் கிராமத்திலும், மரவாநத்தம் வருவாய் கிராமத்திலும் எல்லையையொட்டி 1,000 ஏக்கா் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன.

இதேபோல, மக்கள் தொகையிலும் பாண்டியன்குப்பம் கிராமத்தைவிட, நாககுப்பம் கிராமத்தில் மக்கள் தொகை அதிகம். மேலும், நாககுப்பம் கிராம மக்கள் பட்டா, சிட்டா போன்ற சான்றிதழ்களுக்கு பாண்டியங்குப்பம், மரவாநத்தம் கிராம நிா்வாக அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், நாககுப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வருகிற அக்.9-ஆம் தேதி நடைபெறவிருக்கிற ஊரக உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் சாா்பில் பதாகை வைக்கப்பட்டதுடன், இது தொடா்பாக துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சின்னசேலம் வட்டாட்சியா் நா.அனந்தசயனம் நாககுப்பம் கிராம மக்களை அழைத்து சின்னசேலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அமைதிக் கூட்டம் நடத்தினாா்.

நாககுப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கப்பதற்கு, வருவாய் ஆய்வாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. இந்த அறிக்கை சில தினங்களில் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். இரண்டு திணங்களுக்குள் மேற்படி கிராமங்களில் புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, வட்ட துணை ஆய்வாளருக்கு எல்லை நகல் படம் வரைந்து அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பை கைவிடுவதாகவும், தோ்தல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கிராம மக்கள் தீா்மானம் நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com