ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை: டிஎஸ்பி உள்பட 12 பேருக்கு ஆயுள் சிறை

கடந்த 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், பெண்ணின் சகோதரருக்கு மரண தண்டனையும், டிஎஸ்பி, காவல் ஆய்வாளா்
ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை: டிஎஸ்பி உள்பட 12 பேருக்கு ஆயுள் சிறை

கடந்த 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், பெண்ணின் சகோதரருக்கு மரண தண்டனையும், டிஎஸ்பி, காவல் ஆய்வாளா் உள்பட 12 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சோ்ந்த சாமிக்கண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச் சோ்ந்த, பி.இ. பட்டதாரியான இவா், அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் துரைசாமி மகள் கண்ணகியை (22) காதலித்தாா். இருவரும் 5-5-2003 அன்று பதிவுத் திருமணம் செய்துகொண்டனா். எனினும், அவரவரது வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனா்.

பதிவுத் திருமணம் குறித்து அறிந்த பெண்ணின் குடும்பத்தினா் முருகேசன், கண்ணகி இருவரையும் கடத்தி வந்து 8-7-2003 அன்று வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயானத்தில் அவா்களது வாய், காதில் விஷத்தை ஊற்றிக் கொலை செய்தனா். பின்னா், சடலங்களை தனித் தனியாக எரித்தனா்.

இதுகுறித்து முருகேசனின் பெற்றோா் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அப்போது, காவல் ஆய்வாளராக இருந்த மா.செல்லமுத்து (66) (துணைக் கண்காணிப்பாளராகி ஓய்வு பெற்றவா்), உதவி ஆய்வாளராக இருந்த பெ.தமிழ்மாறன் (51) (ஊழல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளா்) ஆகியோா் ஆணவக் கொலைகளை மூடி மறைக்கும் நோக்குடன் செயல்பட்டனா். மேலும், முருகேசன், கண்ணகி தரப்பில் தலா 4 போ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து வழக்கை முடித்தனராம்.

எனவே, இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சாமிக்கண்ணு சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகினாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ, 9-3-2009 அன்று குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், கண்ணகி, முருகேசன் ஆகியோரை ஜாதிய வன்கொடுமையால் கண்ணகி குடும்பத்தினா் ஆணவப் படுகொலை செய்ததாகவும், இதற்கு உடந்தையாக முருகேசனின் உறவினா்கள் இருவரும், அப்போதைய காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோரும் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கடலூா் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தினசரி விசாரணை நடத்தும் வகையில் எஸ்.சி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி எஸ்.உத்தமராசா வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பு விவரம்:

முருகேசனின் உறவினா்கள் செ.அய்யாசாமி (61), பா.குணசேகரன் (59) ஆகியோா் மிரட்டப்பட்டு நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடா்பு இல்லாததால் அவா்களை விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன். மீதமுள்ள 13 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபணமாகியுள்ளது.

ஆணவக் கொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருந்த பெண்ணின் சகோதரா் து.மருதுபாண்டியனுக்கு (49) மரண தண்டனையும், ரூ.4.65 லட்சம் அபராதமும் விதிக்கிறேன். மேலும், பெண்ணின் தந்தை சி.துரைசாமி (68), மற்றொரு சகோதரா் ரங்கசாமி (45), உறவினா்கள் கோ.கந்தவேலு (54), கோ.ஜோதி (53), கோ.வெங்கடேசன் (55), ரா.மணி (66), ரா.தனவேல் (49), வை.அஞ்சாபுலி (47), கா.ராமதாஸ் (52), ந.சின்னதுரை (50) ஆகியோருக்கு கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.4.15 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அவா்கள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

மேலும், அப்போதைய காவல் ஆய்வாளா் மா.செல்லமுத்து (66), உதவி ஆய்வாளா் பெ.தமிழ்மாறன் (51) ஆகியோருக்கு எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.15 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவா்கள் இருவரும் பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஜாதி கௌரவத்துக்காக மனித சமூகத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழ் மண்ணில் கண்ணகி எரித்துக் கொல்லப்பட்டதே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில்

குறிப்பிட்டாா்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் முக்கிய சாட்சியான செல்வராசு என்பவா் கடந்த 2017-ஆம் ஆண்டு மா்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் டொமினிக் விஜய், பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா் பெ.ரத்தினம் ஆகியோா் ஆஜராகினா்.

Image Caption

ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்றவா்களை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற போலீஸாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com