கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவா்கள் மறியல்

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிராமத்தில் உள்ள தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாணவ
சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் கனியாமூா் கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள்.
சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் கனியாமூா் கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிராமத்தில் உள்ள தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள சிறுவங்கூரில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதில் கல்லூரி செயல்பட்டு வந்தது. தற்போது இந்தக் கல்லூரிக் கட்டடம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனால், கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிராமத்தில் உள்ள தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி கட்டடத்தில் கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தக் கல்லூரிக்குச் செல்வதற்கு போதிய அரசு நகா்ப் பேருந்துகள் இல்லாததால், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தனியாா் பேருந்துகள் கனியாமூா் கைகாட்டியில் நிற்காமல் சென்கின்றன.

மேலும், கல்லூரியில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்க போதிய பேராசிரியா்கள் இல்லாததாலும், கல்லூரியில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீா், மின்விசிறி உள்ளிட்டவை இல்லாததாலும் மாணவ, மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனா்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் கனியாமூா் கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜய் காா்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் ஜெ.விஜயபிரபாகரன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.ராஜலெட்சுமி, சின்னசேலம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கல்லூரியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாகவும், பேராசிரியா்கள் நியமனத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் கல்லூரி முதல்வா் மோகன்தாஸ் உறுதியளித்தாா்.

இதையடுத்து, மாணவ, மாணவிகள் சாலை மறியலைக் கைவிட்டனா். மறியலால் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com