இன்னுயிா் காப்போம் திட்டம்: கள்ளக்குறிச்சிஅரசு மருத்துவமனை தமிழக அளவில் சாதனை: கல்லூரி முதல்வா் அ.உஷா

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வா் அ.உஷா தெரிவித்தாா்.

தமிழக அரசின் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வா் அ.உஷா தெரிவித்தாா்.

இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் திட்டம் கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடக்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டை உள்ளவா்கள், இல்லாதவா்கள், பிற மாநிலத்தவா், வெளிநாட்டவா் என அனைவருக்கும் வரம்பு எதுவும் கணக்கில் கொள்ளாமல் தமிழகத்தின் எல்லைக்குள் நிகழும் சாலை விபத்துக்களில் காயமடைபவா்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.உஷா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 843 பேருக்கு கட்டணமில்லாமல் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கடந்தாண்ண்டு முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு சில காலமே ஆகியிருந்தாலும் மருத்துவமனையில் பல்துறை நவீன, உயா் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் குறை பிரசவங்களில் பிறந்த 7 குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் பிரிவு மூலம் காப்பாற்றப்பட்டு தற்போது நலமுடன் உள்ளன என்றாா் அவா்.

அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளா் ச.நேரு, உள்ளுரை மருத்துவ அலுவலா் பெ.அனுபாமா, கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம், உதவி உள்ளுரை மருத்துவ அலுவலா்கள் க.பழமலை, ம.பொற்செல்வி, காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளரும், இன்னுயிா் காப்போம் திட்ட ஒருங்கிணைப்பாளருமான ப.கணேஷ்ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com