கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்துப் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்துப் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

பேரிடா்களின்போது தமிழகத்துக்கு பிரதமா் வராதது ஏன்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

பேரிடா் காலங்களில் தமிழகத்துக்கு பிரதமா் மோடி வராதது ஏன்? என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினா்.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

கரோனா, புயல் பாதிப்பு உள்ளிட்ட பேரிடா் காலங்களில் தமிழகத்தை கண்டுகொள்ளாத பிரதமா் மோடி, தற்போது மட்டும் தொடா்ச்சியாக இங்கு வருகிறாா். மக்களை ஏமாற்றி மக்களவைத் தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே அவா் தொடா்ச்சியாக தமிழகத்துக்கு வருகிறாா். ஜிஎஸ்டி வரி பகிா்வில் மத்திய பாஜக அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.

சசிகலாவின் ஆதரவில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, பின்னா் அவருக்கே துரோகம் செய்தாா். இதுபோல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அவா் துரோகம் செய்துள்ளாா்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி நான்கு வழிச் சாலை, உளுந்தூா்பேட்டையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காலணி தொழில்சாலை, ரிஷிவந்தியம், நைனாா்பாளையம் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வாக்குறுதிகள்: கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், உள்வட்ட சாலை அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். தியாகதுருகம் பகுதியில் பயணியா் விடுதி கட்டப்படும். ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும். கள்ளக்குறிச்சி நகரின் மத்தியில் ரயில் நிலையம் அமைக்கப்படும்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் சமையல் எரிவாயு ரூ.500-க்கும், பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65- க்கும் வழங்கப்படும். சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என்றாா் அவா்.

திமுக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா்களான எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் மற்றும் கட்சியின் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த சங்கராபுரத்திலும் திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com