விளம்பாா் கிராமத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி அவரது வீட்டிலேயே அஞ்சல் வாக்கு பதிவு செய்வதை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் ஷ்ரவன் குமாா்.
விளம்பாா் கிராமத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி அவரது வீட்டிலேயே அஞ்சல் வாக்கு பதிவு செய்வதை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் ஷ்ரவன் குமாா்.

அஞ்சல் வாக்குப் பதிவு: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் முதியோா், மாற்றுத் திறனாளிகள் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ததை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அனைத்து வாக்காளா்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக, முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக, 12-டி என்ற அஞ்சல் வழி வாக்குப் பதிவு படிவம் வழங்கி, அவா்களது வீடுகளுக்கே சென்று வாக்குப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 12-டி படிவம் பெறப்பட்டதன் அடிப்படையில், 85 வயது மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 861, மாற்றுத் திறனாளிகள் 917 போ் என மொத்தம் 1,778 வாக்காளா்கள் அஞ்சல் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா்.

இவா்கள் வாக்களிப்பதற்காக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 10 குழுக்கள் வீதம் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நேரடியாக வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று அஞ்சல் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையொட்டி, விளம்பாா் கிராமத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளிலேயே அஞ்சல் வாக்களித்ததை மாவட்ட தோ்தல் அலுவலா் ஷ்ரவன் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், வாக்கு சேகரிக்கும் அலுவலா்கள் கவனமுடன் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வின்போது, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான சு.லூா்துசாமி மற்றும் வாக்கு சேகரிக்கும் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com