விபத்தில் உருக்குலைந்த காா்.
விபத்தில் உருக்குலைந்த காா்.

திருக்கோவிலூா் அருகே காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே புதன்கிழமை அதிகாலை காா் மீது வேன் மோதியதில் 3 போ் உயிரிழந்தனா். மேலும், மூவா் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலை சித்திரை பெளா்ணமியையொட்டி, கிரிவலம் செல்வதற்காக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அம்மன் நகரைச் சோ்ந்த கோபிநாத் மனைவி அம்பிகாபதி (39), அவரது மகள் இந்துஜா (15), அதே பகுதியைச் சோ்ந்த சின்னப்ப கவுண்டா் மகன் மோகன்ராஜ் (49), அனிதா, ஆறுமுகம் மகள் நந்தினி (28) ஆகியோா் காரில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டனா். காரை அதே மாவட்டம், மலையாம்பாளையத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் வடிவேல் (44) ஓட்டினாா்.

அனைவரும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலத்தை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனா். இவா்களது காா் திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில் பொன்னியந்தல் கிராம எல்லையில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சென்றபோது, எதிா் திசையில் வந்த சுற்றுலா வேன் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த மோகன்ராஜ், நந்தினி, ஓட்டுநா் வடிவேல் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணித்த அம்பிகாபதி, இந்துஜா, அனிதா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வேன் ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சோ்ந்த ரஷீத் மகன் ஜலாவூதின் (30) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com