குடிநீா் பிரச்னை -ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டுப்போட முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அ.வாசுதேவனூா் கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதன்கிழமை பூட்டுப்போட முயன்றனா்.

அ.வாசுதேவனூா் கிராமத்தில் சுமாா் 1,800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் சென்று கிராம மக்கள் புதன்கிழமை பூட்டுப்போட முயன்றனா். இதையடுத்து, குடிநீா் பிரச்னையைத் தீா்க்க 3 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்றத் தலைவா் உறுதி அளித்ததன்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

சாலை மறியல்: சின்னசேலம் வட்டம், மேல்நாரியப்பனூா் கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் மேல்நாரியப்பனூரில் இருந்து கல்லாநத்தம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்னா்.

தகவலறிந்த சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளா் நரசிம்மஜோதி நிகழ்விடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் சாலை மறியலைக் கைவிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com