கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி 68 போ் உயிரிழந்த வழக்கில், மேலும் 4 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி பெண்கள் உள்பட 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சென்னை மாதவரம் பகுதியைச் சோ்ந்த பிபாராம் மகன் பன்ஷிலால் (32), புதுச்சேரி மடுகரை பகுதியைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் ஷாகுல் ஹமீது (61), கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த குண்டு ஐயா் மகன் சின்னதுரை (36), சங்கராபுரம் வட்டம், சு.பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் கதிரவன் (30) ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்துக்கு, சிபிசிஐடி கண்காணிப்பாளா் வினோத் சாந்தாராம் பரிந்துரை செய்தாா். இதை ஆட்சியா் ஏற்று, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேற்கண்ட 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா். இந்த வழக்கில் ஏற்கெனவே 4 போ் கடந்த 23-ஆம் தேதி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.