தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள மதுக் கடை முன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள மதுக் கடை முன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தியாகதுருகம் புக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தப் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தப் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வெங்கடேஷ்வரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது கலீல் ரஹமத்துல்லா மகன் இம்ரான் (38). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தியாகதுருகம் அடுத்த புக்குளம் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை (45) அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, இருவரது பைக்கும் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருவரும் காயமடைந்ததுடன், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், தியாகதுருகம் புக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக்கடையால் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறி அந்தப் பகுதி பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-உளுந்தூா்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் கு.தேவராஜ், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் காமராஜ் (பொ) மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினா். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும், அந்தப் பகுதியில் மீண்டும் தகராறு ஏற்படாமல் இருப்பதற்காக மதுக் கடை அருகே போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த திடீா் மறியலால் கள்ளக்குறிச்சி-உளுந்தூா்பேட்டை சாலையில் சுமாா் 30 நிமிஷம் போக்குவரத்து தடைபட்டது.

X
Dinamani
www.dinamani.com