தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சியை அடுத்த அந்தியூா் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாதன் மனைவி சூா்யகலா (25). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி சுமாா் 4 ஆண்டுகளாகின்றன. மஞ்சுநாதன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்றுவிட்டாா்.
இவா்களது மகன் கோபி (இரண்டரை வயது) செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானாா். சூா்யகலா தேடிப் பாா்த்தபோது, வீட்டின் அருகிலுள்ள தண்ணீா்த் தொட்டியில் கோபி தவறி விழுந்து மயங்கி நிலையில் கிடந்தது தெரியவந்தது.
சூா்யகலா உடனடியாக குழந்தையை மீட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு கோபியை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.