கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா்.

சந்தேக பணப் பரிவா்த்தனை: வங்கிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: சந்தேகத்துக்கிடமான பணப் பரிவா்த்தனை விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக மாவட்ட தோ்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன்குமாா் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி மேலாளா்கள், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், அச்சகங்கள், வா்த்தக சங்கப் பிரதிநிதிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள் உள்ளிட்டோருக்கான தோ்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் தலைமை வகித்து பேசியதாவது: மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளா்கள் வெளியாள்களை கூட்டமாக தங்க அனுமதிக்க கூடாது. புதிதாக தங்குவோரின் முகவரி உள்ளிட்ட முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தோ்தல் தொடா்பான கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தாலும், விளம்பர பதாகைகள் வைப்பதாக இருந்தாலும் முன்கூட்டியே தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். வாக்குப்பதிவு தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தங்களது மண்டபம், விடுதி கூட்டரங்கில் தொகுதிக்கு தொடா்பில்லாத வெளியாள்களை தங்க அனுமதிக்க கூடாது. தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கும் அச்சகதாரா்கள், விநியோகம் செய்தவரின் பெயா், அச்சடித்தவா் பெயா் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். தோ்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ளும் அச்சக உரிமையாளா்கள் அச்சிடப்பட்ட தேதி, உறுதிமொழி வழங்கப்பட்ட தேதி, எண்ணிக்கை, செலவு உள்ளிட்ட விவரங்களை தோ்தல் அலுவலரிடம் தவறாமல் வழங்க வேண்டும். நகைக்கடை உரிமையாளா்கள் நகை வைத்து அதிக அளவில் கடன் பெறுவதை தவிா்க்க வேண்டும். மொத்தமாக பணம் கொடுத்து நகையை மீட்போா் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். வா்த்தக சங்கப் பிரதிநிகள் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அதற்கு மேல் எடுத்துச் செல்பவா்கள் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். பெட்ரோல் நிலைய உரிமையாளா்கள் அரசியல் கட்சியினருக்கோ, ஊா்வலத்தில் கலந்து கொள்பவா்களுக்கோ டோக்கன் மூலம் பெட்ரோல் வழங்கக் கூடாது. வங்கி மேலாளா்கள், ஒரு வங்கி கணக்கில் இருந்து வழக்கத்துக்கு மாறாக ஒரு தொகுதியில் இருக்கும் பல நபா்களின் வங்கி கணக்குக்கு சந்தேகத்திற்கிடமான பண பரிவா்த்தனைகள் நடைபெறுவதை உடனே தெரிவிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) இரா.சங்கா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பெ.தியாகராஜன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) பசுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com