வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி, மே 3: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிலை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடந்த இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு, வெயிலினால் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் இக்குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கத்தினால் மருத்துவமனைகளில் தீ விபத்து போன்ற எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மருத்துவமனைகளில் உள்ள மின் இணைப்புகளை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலைகள், பாதுகாப்பு குடோன்கள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய திரவங்கள், வாயுக்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இக்குழுவின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வின்போது தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருந்தாலோ, முறையாக அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் நடப்பது கண்டறியப்பட்டாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே.ரமேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com