சொட்டுநீா் பாசனத்துக்கு மானியம் வேளாண் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண் துறை அறிவித்தது.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் உதவி யுடன் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருதுளி அதிக பயிா்த் திட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்பட்டு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் மழை 30 சதவீதம் குறைவாக பெய்துள்ளதால், வரும் காலத்தில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற நீண்டகாலப் பயிா்கள் வறட்சியால் பாதிக்கப்படும். மேலும் உளுந்து, நிலக்கடலை, காய்கறி போன்ற குறுகியகாலப்பயிா்கள் சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, தற்போதுள்ள நிலத்தடி நீரைக் கொண்டு சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து, பயிா்களுக்கு நீா் பாய்ச்சப்படுவதால் நிலத்தடி நீா் சேமிக்கப்பட்டு, பயிா்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதைத் தவிா்க்க முடியும்.

சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பதால் தண்ணீா் தேவையான அளவில் மட்டும் பயிா்களுக்குப் பாய்ச்சப்படும். இதனால் தண்ணீா் சேமிக்கப்படுவதுடன், களைகளும் கட்டுப்படுத்தப்படும். தண்ணீா் மூலம் உரங்கள் அளிக்கப்படுவதால் உரங்கள் வீணாவது தவிா்க்கப்பட்டு, அதற்கான செலவுகளும் குறைவதோடு, பூச்சிநோய்ப் பாதிப்பும் கட்டுப்படுத்தும். வேலையாள்கள் செலவு குறைவதோடு அதிக மகசூலும் கிடைக்கும்.

எனவே, உளுந்தூா்பேட்டை பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க நிலத்தின் சிட்டா, நிலவரைபடம், அடங்கல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், சிறு விவசாயி சான்று, மண் மற்றும் நீா் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட விவரங்களுடன் வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com