கனியாமூா் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு

கனியாமூா் தனியாா் பள்ளி மாணவி மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கு விசாரணையை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூா் தனியாா் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த 13.7.2022 அன்று மா்மமான முறையில் உயிரிழந்தாா். இந்த வழக்கு தொடா்பான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் தாய் செல்வி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், வழக்கின் முதல் தகவல் அறிக்கை, அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகள், கைப்பேசி உரையாடல்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும் எனக் கோரினாா்.

மேலும், வழக்கில் இருந்து நீக்கப்பட்ட ஆசிரியா்கள் கீா்த்திகா, ஹரிபிரியா ஆகியோரின் பெயா்களை மீண்டும் சோ்க்க வேண்டும் என மாணவியின் தாய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, வழக்கு விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்துவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டாா். மேலும், அன்றைய தினம் பள்ளித் தாளாளா், செயலா் உள்ளிட்டோா் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி ரவிக்குமாா், பள்ளி முதல்வா் சிவசங்கரன் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

அப்போது, பள்ளி தரப்பினரைக் கண்டதும் மாணவியின் தாய் செல்வி கூச்சலிட்டவாறு கதறி அழுதாா். அருகிலிருந்தவா்கள் அவரை சமாதானப்படுத்தினா்.

தொடா்ந்து, மாணவியின் தாய் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பவானி பா.மோகன், கடந்த விசாரணையின்போது கோரியிருந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை, சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டுமென கோரினாா்.

இதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞா் தேவசந்திரன், மீண்டும் கால அவகாசம் கோரியததைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டாா். அப்போது, பள்ளி தரப்பினா் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com