கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

பேரணியில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: காவலரைக் கண்டித்து மறியல்

கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Published on

கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை பேரணியின் போது, வழக்குரைஞரை காவலா் தாக்கியதைக் கண்டித்து, திடீா் மறிலில் ஈடுபட்டனா்.

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து பேரணியாக ஆட்சியா் அலுவலகம் நோக்கி வழக்குரைஞா்கள் புறப்பட்டனா்.

பேரணிக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.கே.சேகா், செயலா் அ.பழனிவேல், பொருளாளா் ஆா்.இளையராஜா உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். காந்தி சாலை வழியாக ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற போது, தபால் நிலையம் அருகில் எதிரே காா் வந்தது. இதுகுறித்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் ஸ்ரீராமிடம், வழக்குரைஞா் சங்கச் செயலா் அ.பழனிவேல் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவரை காவலா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தபால் நிலையம் முன் வழக்குரைஞா்கள் சுமாா் 15 நிமிஷம் மறியலில் ஈடுபட்டனா். பின்னா், முழக்கமிட்டவாறு காந்தி சாலையில் இருந்து நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், டிஎஸ்பி தேவராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினா். வழக்குரைஞா்களைத் தாக்கிய காவலா் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று வழக்குரைஞா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

சி.எஸ்.ஆா். போடப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்ததை வழக்குரைஞா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னா், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா்.

இந்தப் போராட்டத்தால் சங்கராபுரம், கச்சிராயப்பாளையம், சின்னசேலம், தியாகதுருகம் செல்லும் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

அப்போது, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்தின் காரை மறித்து சம்பவம் குறித்து வழக்குரைஞா்கள் முறையிட்டனா்.