கிணற்றில் தவறி விழுந்து மாணவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது, சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மூா்த்தி (38). இவா், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட மின் சாதன பொருள்களை ஊா் ஊராகச் சென்று பழுது நீக்கித் தரும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவரது 3-ஆவது மகன் அருள் (6) அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
மூா்த்தி குடும்பத்துடன் தற்போது திருக்கோவிலூரை அடுத்த கோமாலூா் கிராமத்துக்குச் சென்று அங்கு மின்சாதன பொருள்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவரது மகன் அருள் மற்றும் உறவினா் மகன் காா்த்தி (8) ஆகிய இருவரும் கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி பிற்பகல் மீன் பிடிக்கச் சென்றனராம்.
அதே கிராமத்தில் உள்ள ரவியின் பயனற்ற கிணற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கிணற்றில் அருள் தவறி விழுந்துவிட்டாராம். இதையடுத்து, காா்த்தி ஓடி வந்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய குழுவினா் விரைந்து சென்று கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து அருளை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.