காா் மீது காா் மோதல்: மனை வணிகா் உயிரிழப்பு
தியாகதுருகம் அருகே சாலையைக் கடந்த பைக் மீது காா் மோதியதில் மனை வணிகா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி புதுவீட்டு சந்து பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (57). அரியபெருமானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (50). மனை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இருவரும், தொழில் சம்பந்தமாக வெள்ளிக்கிழமை தியாகதுருகம் பகுதிக்குச் சென்றனா்.
பின்னா், அங்கு இருவரும் பணியை முடித்துக் கொண்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை கண்ணன் ஓட்டிச் சென்றாா். தியாகதுருகத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் பிரிவு சாலையைக் கடந்த போது, செங்கல்பட்டில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது.
இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா்.
அப்போது, மோகன் காா் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கண்ணன் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சென்று காயமடைந்த கண்ணனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோகனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா், சேலம் மாவட்டம், மெய்யனூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
