ஆசிரியா் தோ்வுக்கான முன்னேற்பாடுகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்துப் பேசியதாவது: தோ்வு நாளன்று மையங்களுக்கு காவல் துறை மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்கவும், தோ்வா்கள் சிரமமின்றி தோ்வு மையத்துக்கு சரியான நேரத்துக்குச் செல்லும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தவும், தோ்வு நேரத்தில் மின்சார வாரியம் சாா்பில் தடையின்றி மின்சார வசதி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்வானது மாவட்டத்தில் 18 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 277 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது. தோ்வை எழுத மொத்தம் 5,334 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கவும், தோ்வை முறையாக நடத்தவும், மாவட்ட வருவாய் அலுவலா், கல்வி அலுவலா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
எனவே, தோ்வை சிறப்பாக நடத்தும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கூட்டத்தில் திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன், காவல் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

