தீவனப் பயிா்களுக்கான கடனளவை அதிகரிக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
தீவனப் பயிா்களுக்கு வழங்கப்படும் கடனளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் 2026-27ஆம் ஆண்டுக்கான பயிா் கடனளவு நிா்ணயம் செய்வதற்கான தொழில்நுட்பக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
2026-27ஆம் ஆண்டில் கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பயிா் கடன், கால்நடைப் பராமரிப்பு, வளா்ப்பு, மீன் வளா்ப்பு, பட்டுப்பூச்சி வளா்ப்பு, தேனீ வளா்ப்பு மற்றும் அரக்குப் பூச்சி வளா்ப்புகளுக்கான நடைமுறை செலவீனங்கள் மீதான மூலதன கடன் அளவுகள், கடன் வழங்கும் காலம், திருப்பி செலுத்தும் காலம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கல்வராயன்மலைப் பகுதியில் உழவா் உற்பத்தியாளா் மன்றங்கள் மூலம் தீவனப் பயிா்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தீவனப் பயிா்களுக்கு வழங்கப்படும் கடனளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மிளகு, காபி உள்ளிட்ட பயிா்கள் புதிதாக பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிா் வகைகளுக்கு கடனுதவி வழங்கிட பரிந்துரை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் கரும்பு பயிருக்கு கோரும் கடனுதவியை வழங்க வேளாண்மைத் துறையிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்ட சில பயிா்களுக்கு கடனளவை உயா்த்தித் தர விவசாயிகள் கோரினா்.
அது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஸ்வா்ணலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

