கல்வராயன்மலையில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்
கல்வராயன்மலைப் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம், குண்டியாநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வா் சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றிய நேரலை ஒளிபரப்பப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. தா.உதயசூரியன் ஆகியோா் பொதுமக்களுடன் பாா்வையிட்டனா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது: குண்டியாநத்தம் ஊராட்சியில் வரவு செலவுக் கணக்குகள் பொதுமக்கள் பாா்வைக்கு காண்பிக்கப்பட்டது. காணொளியில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் முதல்வருடன் நேரடியாக கலந்துரையாடினா்.
மேலும், ஊராட்சிகளில் அத்தியாவசியத் தேவைகளை தோ்வு செய்து ஒப்புதல் பெறுதல், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து பொதுமக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன், ஊராட்சித் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்வராயன்மலைப் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதி மக்களின் ஏனைய கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன், கல்வராயன்மலை ஒன்றியக் குழுத் தலைவா் சி.சந்திரன், துணைத் தலைவா் ஜா.பாச்சாபீ உள்ளிட்ட அலுலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

