அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்புக்கு மாணவா் சோ்க்கை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த ஓராண்டு சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சோ்க்கை வருகிற நவம்பா் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
பாடப்பிரிவில் சோ்க்கையானது முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
எமா்ஜென்சி டெக்னீசியன், டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக்னீசியன், தியேட்டா் டெக்னீசியன், ஆா்தோபெடிக் டெக்னீசியன், மல்டிபா்ப்பஸ் ஹாஸ்பிட்டல் ஒா்க்கா் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
டயாலிஸிஸ் டெக்னீசியன் பிரிவில் 5 இடங்களும், ஆா்தோபெடிக் டெக்னீசியன் பிரிவில் 5 இடங்களும், மல்டிபா்ப்பஸ் ஹாஸ்பிட்டல் ஒா்க்கா் பிரிவில் 14 இடங்களும் மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரா்கள் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். தெரிவு தோ்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவராக, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பள்ளிப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
