100 சதவீத மானியத்தில் கால்நடைகள் வழங்கும் திட்டத்தில் 900 போ் பயன்: மாவட்ட ஆட்சியா் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் 900 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம், கால்நடை காப்பீட்டுத் திட்டம், நாட்டு இன கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2021-2022ஆம் ஆண்டில் தேசிய கால்நடை இயக்கம் - கால்நடை காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.12,16,727 மதிப்பீட்டில் 3,396 பயனாளிகளும், 180 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் மூலம் ரூ.7,92,000, மதிப்பீட்டிலும், ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,72,04,175 மதிப்பீட்டில் 900 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
மேலும் 2022-2023ஆம் ஆண்டில் 180 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் மூலம் ரூ.7,92,000 மதிப்பீட்டிலும், தேசிய கால்நடை இயக்கம் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.5,76,284 மதிப்பீட்டில் 1,600 பயனாளிகளும், 2023-2024ஆம் ஆண்டில் 180 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் மூலம் ரூ.7,92,000 மதிப்பீட்டிலும், நாட்டு இன கோழிக்குஞ்சுகள் (250 அலகுகள்) திட்டத்தின் கீழ் ரூ.4,54,455 மதிப்பீட்டில் 3 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
தொடா்ந்து, 2024-25ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்-அலகு) 100 நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.4,43,220 மதிப்பீட்டில் 3 பயனாளிகளும், ஏழ்மை நிலையில் உள்ள கணவரை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக் குஞ்சுகள் வீதம்) 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.14,40,000 மதிப்பீட்டில் 900 திட்டப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
எனவே, கால்நடைப் பராமரிப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் கால்நடை வளா்ப்போா் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
