கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கால நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

மழைக்கால நோய்த் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Published on

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கால நோய்த் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் 45 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 12 நடமாடும் மருத்துவக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

ஒரு நடமாடும் மருத்துவக் குழுவுக்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 36 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாமில் மழைக்கால நோய்களான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவை குறித்தும், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட ஆரம்பகட்ட நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்புக்கடி மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான அனைத்து உயிா்காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

இதேபோன்று மழைக்கால நோய் பாதிப்புகளான டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் மற்றும் இதர நோய் பாதிப்புகள் குறித்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மழைக்கால நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, தமிழக அரசின் சுகாதாரத் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com