புதுச்சேரி, ஜூலை 14: விவசாயிகளிடம் இருந்து அரசு நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
÷இச்சங்கத்தின் தலைவர் எம். மாசிலாமணி, பொதுச் செயலர் து. கீதநாதன் ஆகியோர் வேளாண்துறை அமைச்சர் சந்திரகாசுவைச் சந்தித்து மனு அளித்தனர்.
÷அதில் கூறியிருப்பது: புதுச்சேரி பகுதியின் வேளாண் வளர்ச்சி குறித்து விவாதித்து செயல்படுத்த கடந்த காலத்தில் வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
÷இந்தக் குழுவில் காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அங்கம் பெற்றிருந்தனர்.
÷இப்போது புதுச்சேரிக்குத் தனியாகவும், காரைக்காலுக்குத் தனியாகவும், மாஹே, யேனம் ஆகியப் பகுதிகளுக்கு என்று தனியாகவும் உயர்நிலைக் குழு அமைத்தால் சிறப்பாகச் செயல்பட முடியும்.
÷கூட்டுப்பட்டா, கோயில் புறம்போக்கு, குத்தகை நிலங்களில் பயிரிடுவோர் அனைவருக்கும் வேளாண் அலுவலர் விசாரணை அடிப்படையில் வேளாண் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
÷60 வயது அடைந்த விவசாயிகள் அனைவருக்கும் ஆண், பெண் வித்தியாசமின்றி பென்ஷன் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.
÷அனைத்துப் பயிர்களுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை அமல் செய்ய வேண்டும். நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர் சாகுபடி செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
÷இத்திட்டத்தின் நோக்கமே மின்சாரம் மற்றும் தண்ணீர் அதிகம் செலவழிப்பதைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகதான்.
÷இத்திட்டத்தை விரும்பி ஏற்று மாற்றுப் பயிராக மணிலா, உளுந்து, காராமணி, சூரியகாந்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்தவர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
÷கிடப்பில் உள்ள ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்ய விதையிட்ட 2 மாதங்களுக்கு உள்ளாகவே ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.
÷மண் தன்மை கெட்டுப் போவதையொட்டியும் உரம், இடு பொருள்கள் விலையேற்றத்தைக் கொண்டும் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் விரும்பி செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வேளாண்துறை செயல்படுத்த வேண்டும்.
÷பஞ்சகாவ்ய முறை மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.
÷கடப்பாரை, மண்வெட்டி, ஏர் கலப்பை, களைக் கொத்தி போன்றவை ஐந்தாண்டுகளுக்கு முன்பு மானிய விலையில் விவசாயிகளுக்கு தரப்பட்டது. மீண்டும் இதைத் தர வேண்டும். ÷மாட்டுத் தீவனம், கன்று தீவனம் வழங்க வேண்டும். கூட்டுறவு மாட்டுப் பண்ணை அமைக்க வேண்டும். கூட்டுறவு பால் பண்ணை அமைக்க வேண்டும்.
÷கரும்புக்கான விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் அடங்கிய முத்தரப்புக் குழுவை ஏற்படுத்தி அக் கூட்டத்தில் முடிவு செய்ய வேண்டும்.