புதுச்சேரி, ஜூலை 14: புதுச்சேரியில் இளைஞர் கொள்கை வெளியிட வேண்டும் என்று தேசிய விருதாளர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி தேசிய விருதாளர் கூட்டமைப்பின் தலைவர் எம்.செல்வமணிகண்டன், பொதுச் செயலர் ஜெ.ஜெயகிருஷ்ணன், சி.கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு ஒன்றை இளைஞர் நலத்துறை அமைச்சர் பி.எம்.எல்.கல்யாணசுந்தரத்திடம் அண்மையில் அளித்தனர்.
அதன் விவரம்: புதுச்சேரியில் இளைஞர் கொள்கையை அரசு வெளியிட வேண்டும். இளைஞர் சமுதாயத்தின் வழிகாட்டியாக திகழும் விவேகானந்தருக்கு புதுச்சேரியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய இளைஞர் விழாவை புதுச்சேரியில் நடத்த வேண்டும். தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12-ம் தேதியை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். சமூக சேவை மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை தேர்வு செய்து, சுதந்திர தினத்தன்று விவேகானந்தர் பெயரில் விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டுள்ளது.