புதுச்சேரி, ஜூலை 14: இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தர்ணா போராட்டம் நடத்த உள்ளன.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் நாரா. கலைநாதன், மார்க்சிஸ்ட் செயலர் வி. பெருமாள் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பொதுவாழ்வின் அனைத்து தளங்களிலும் புரையோடி போயிருக்கும் ஊழலைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய இயக்கத்தை நடத்த இடதுசாரிகள் தீர்மானித்துள்ளன. வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். நீதித்துறையின் உயர்நிலையில் ஊழலைத் தடுக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயவு தாட்சணியமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல்களில் பணபலம் விளையாடுவதைத் தடுக்க விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்துவது என்பன உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும். ÷கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து வெளிக் கொணரவும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சட்டவிரோத பணத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 15 முதல் 21-ம் தேதி வரை நாடு முழுவதும் இடதுசாரிகள் கூட்டாக மாபெரும் இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன.
புதுச்சேரியில் தலைமை தபால் அலுவலகம், வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு ஆகிய மையங்களில் 15-ம் தேதியும், காரைக்காலில் 16-ம் தேதியும் மக்கள் பங்கேற்போடு தர்ணா போராட்டம் நடை
பெறும்.