Enable Javscript for better performance
பேக்கரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: ரவுடிகளை ஊர்வலமாக இழுத்து வந்த போலீஸார்- Dinamani

சுடச்சுட

    

    பேக்கரி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: ரவுடிகளை ஊர்வலமாக இழுத்து வந்த போலீஸார்

    By புதுச்சேரி,  |   Published on : 25th August 2013 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் மாமுல் தர மறுத்த பேக்கரி உரிமையாளரை அரிவாளால் ரவுடிகள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்திரமுற்ற வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரே இரவில் போலீஸார் குற்றவாளிகளைப் பிடித்தனர்.

    பிடிபட்ட ரவுடிகளை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் சாலையில் நடக்க வைத்து போலீஸார் அழைத்து வந்தனர்.

    புதுச்சேரி ரெயின்போ நகரில், பிரெஞ்ச் கார்னர் பேக்கரி உள்ளது. இதன் உரிமையாளர் குணசேகர். இவரது கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த இரண்டு பேர், பொருள்கள் வாங்கி விட்டு பணம் தர மறுத்தனர். மேலும், குமரகுரு பள்ளத்தைச் சேர்ந்த ரவுடி மொந்தை சங்கர் அனுப்பியதாகக் கூறி மாமுல் கேட்டனர். குணசேகர் மாமுல் கொடுக்க மறுத்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கு வந்த மொந்த சங்கர், மாமுல் கொடுக்கும்படி குணசேகரை மிரட்டியதுடன் அரிவாளால் வெட்டினார். இதில் குணசேகருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த வியாபாரிகள் அங்கு திரண்டதும் மொந்த சேகரும் அவனது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பினர்.

    சாலை மறியல்: ரவுடிகளின் அராஜகத்தால் ஆத்திரமுற்ற வியாபாரிகள், கடைகளை அடைத்து விட்டு, காவல்துறையைக் கண்டித்துக் கோஷம் எழுப்பினர்.

    மொந்தை சங்கரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, காமராஜர் சிலையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வியாபாரிகளுக்கு ஆதரவாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், பாஜக மாநில பொதுச் செயலாளர் சுவாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் விஸ்வநாதன், வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன் உள்பட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பர்வேஷ் அகமது, காவல்துறை கண்காணிப்பாளர் (வடக்கு) ராமராஜு ஆகியோர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

    சாலையில் இழுத்து வரப்பட்ட ரவுடிகள்:

    இதைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் வீரவல்லவன் தலைமையில் போலீஸார் ரவுடிகளைத் தேடினர். ஒதியஞ்சாலை, கண் டாக்டர் தோட்டம் பகுதியில் பதுங்கியிருந்த மொந்தை சங்கர் (38) மற்றும் அவனது கூட்டாளிகள் ரகு (26) மற்றும் சந்துரு (25) ஆகியோரை வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

    ரவுடிகளைக் கைது செய்த போலீஸார் அவர்களை மக்கள் அடையாளம் காணும் வகையில் சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

    வெங்கட்டா நகர், 45 அடி சாலை- காமராஜர் சாலை சந்திப்பு வரை ஊர்வலமாக இழுத்து வந்தனர்.    அப்போது, பொதுமக்களும், வியாபாரிகளும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

       தொடர்ந்து மூன்று ரவுடிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    மொந்தை சங்கர் ஏற்கெனவே உணவு விடுதியில் மாமுல் கேட்டு தகராறு செய்ததால், கைது செய்யப்பட்டு, காரைக்கால் காவல்நிலையத்தில் தினமும் கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை ஜாமீனில் வெளியே விடப்பட்டுள்ளார். இதனிடையேதான் வெள்ளிக்கிழமை காலை காரைக்கால் காவல்நிலையத்தில் கையொப்பம் இட்டு விட்டு, புதுச்சேரி வந்து மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai