புதுவையில் கள்ளச்சாவி போட்டு காரைத் திருட முயன்ற தர்மபுரி இளைஞரை பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
புதுவை உருளையன்பேட்டை கோவிந்தப்பிள்ளைத் தெரு, கண்ணன் நகரைச் சேர்ந்தவர் திலகராஜ் (42). மின்வாரிய உதவி பொறியாளராக உள்ளார். இவருக்குச் சொந்தமான குவாலிஸ் காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மர்ம நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு காரை திருடிச் செல்ல முயன்றதாகத் தெரிய வந்தது. அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த திலகராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் காரைத் திருட முயன்ற இளைஞரை கையும், களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இது குறித்து புதுவை உருளையன்பேட்டை போலீஸார் விசாரித்த போது அவர், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (23) என்பதும், கார் ஓட்டுநரான அவர், உறவினர் ஒருவரை சொந்த வேலைக்காக தர்மபுரியிலிருந்து புதுச்சேரிக்கு வாடகைக் காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் காரை நிறுத்திவிட்டு, திலகராஜின் காரை திருட முயற்சித்த போது பிடிபட்டார் எனத் தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில், செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீஸார் அவரைக் கைது செய்தனர்.